பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது “சுப்ரமணியபுரம்”
July 5, 2020 / 10:25 AM IST
|Follow Us
2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சுப்பிரமணியபுரம்”. 1980களில் மதுரையில் நடந்த காதல் கதை மற்றும் அதனால் வந்த பிரச்சினைகளை குறித்த கதையை கருவாக கொண்டுள்ளது இந்த படம்.
இந்தப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டது சசிகுமார். மேலும் இந்த படத்தில் சசிகுமார் நடித்து இவருடன் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருப்பார்கள். 1980களில் இருக்கும் உடை, இடம், மக்கள் என அனைத்தையும் மிகத் துல்லியமாக இந்த படத்தில் இயக்குனர் ரீகிரியேட் செய்திருப்பார். இதற்கான பாராட்டுக்கள் இவருக்கு குவிந்தது.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை அழகாக படம் பிடித்து காட்டியிருப்பார்.ராஜாமுகமது இந்த படக்காட்சிகளை எடிட்டிங் செய்தார்.
ஐந்து நண்பர்கள் மற்றும் அதில் ஒருவருக்கு வரும் காதல், பின்பு சமுதாய ஏற்றத்தாழ்வு அதனால் வரும் பிரச்சனை, நடக்கும் கொலை என்று இந்த படத்தின் கதை விறுவிறுவென நகரும். பரமன்,அழகர் என்ற இரு கதாபாத்திரங்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். இவர்களை சுற்றி கதைக்கரு அமைந்திருக்கும்.
இந்த படத்தின் 10 வருட நிறைவின் பொழுது பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் “கேங்ஸ் ஆஃப் வஸ்செய்ப்பூர்” கதை உருவானது என்று கூறியிருந்தார். மேலும் இந்த படத்தின் திரைக்கதை புத்தகமாக 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இன்றோடு 12 வருடங்களை நிறைவு செய்யும் சுப்பிரமணியபுரம் சசிகுமார் திரைப்பயணத்தில் ஒரு பெரிய மைல்கல் என்று சொன்னால் அது மிகையாகாது.