தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் “பீட்சா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பின்பு “ஜிகர்தண்டா”, “இறைவி” மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் “பேட்ட” ஆகிய படங்களை தற்போது இயக்கி தன் இயக்கத்திற்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.
இவர் இயக்கத்தில் 2014ஆம் வருடம் வெளியான “ஜிகர்தண்டா” திரைப்படம் வெளியாகி இன்றோடு ஆறு வருடங்களை நிறைவு செய்கிறது. இதை கொண்டாடும் விதமாக தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா படத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த கேங்ஸ்டர் திரைப்படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த் லட்சுமிமேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் தனது நடிப்பிற்காக பாபி சிம்ஹாவை பாராட்டாத ஆளே இல்லை.
சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பலம் சேர்த்தது. க்ரூப் கம்பெனி கதிரேசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். விவேக் ஹர்ஷன் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருந்தார்.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவும், சிறந்த எடிட்டர்கான தேசிய விருதை விவேக் ஹர்ஷனும் இந்த படத்திற்காக பெற்றார்கள்.
மேலும் பாபி சிம்ஹா சிறந்த வில்லனுக்கான எடிசன் விருதையும், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சௌந்தர ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.