2014 ஆம் ஆண்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான “நெருங்கி வா முத்தமிடாதே” படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சஞ்சனா நடராஜன்.
ஆரம்ப காலகட்டங்களில் மாடலாக இருந்து பின்பு சிறு சிறு கதாபாத்திரங்களில் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுமார் ஆறு வருட காலமாக தமிழ் திரைத்துறையில் பணிபுரிந்து வரும் இவர் இறுதிச்சுற்று, எந்திரன் 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வெப்சீரிஸ் “அஸ் ஐ அம் ஸஃப்ரிங் ஃபிரம் காதல்” இல் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற சஞ்சன நடராஜன் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜகமே தந்திரம்”. இந்த திரைப்படத்தின் பாடலான “ரகிட ரகிட ரகிட” தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சியாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் தான் நடித்ததற்கு கிடைத்த வாய்ப்பு குறித்தும் அதன் அனுபவம் குறித்தும் பேசிய போது நடிகை சஞ்சனா நடராஜன் “நான் திரையுலகில் கால் பதித்து சில வருடங்களானபோதும் என்னுடைய மெதுவான படிப்படியான முன்னேற்றத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் வேறு வழியில் சென்றிருந்தால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது. ஜகமே தந்திரம் படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றிருக்கிறார். தற்போது வெளியான பாடலின் காட்சிகள் மூலம் கூட சஞ்சனா நடராஜனின் கதாபாத்திரம் குறித்து நம்மால் அறிய முடியும்.
இந்த படத்தில் தன் கதாபாத்திரம் குறித்தும் இந்த படம் குறித்தும் ஒரு வார்த்தை கூட கூறாத சஞ்சன நடராஜன் படத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி பேசியபோது “கார்த்திக் சார் அலுவலகத்திற்கு நான் 2 படங்களுக்காக சென்றிருக்கிறேன். ஆனால் எதுவும் கிடைக்காத நிலையில் அவருடைய வெப் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பின் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு ஆள் தேடி வருகிறார்கள் என்று கேள்விப்பட்டபோது என்னுடைய பெயரை சிலர் ரெகமெண்ட் செய்துள்ளார்கள். அதனால் நான் என் புகைப்படங்களை அனுப்பினேன், பின்பு என்னை செலக்ட் பண்ணினார்கள். இந்த படத்தில் கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணாக என் கதாபாத்திரம் இருக்கும். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முழுவதும் வித்தியாசமாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் இது ஒரு கார்த்திக் – தனுஷ் திரைப்படம் இதில் நடிக்கும் அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் எடுத்து செல்லலாம் என்பதற்காகவே இதில் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
பின்பு நடிகர் தனுஷ் பற்றி “ரகிட ரகிட ரகிட பாடலின் முதல் நாள் சூட்டிங். நான் மிகவும் நெர்வஸாக இருந்தேன். ஆனால் என்னை பொறுமையாக இருக்கும்படி தனுஷ் சப்போட்டிவ்வாக இருந்தார். அவரை நாள்முழுவதும் பர்ஃவாம் செய்வதை பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு டேக்கிலும் எனர்ஜி குறையாமல் நடித்துக்கொண்டிருந்தார். அவர் சிட்டி ரோபோ போல தன்னுடைய கதாபாத்திரத்தை அவ்வளவு உள்வாங்கி நடித்தார். அவருடைய இந்த உழைப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அவர் தன் நடிகர்களுக்கு ஃப்ரீடம் கொடுக்கிறார். அவர்களின் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பாராட்டி புத்துணர்வு கொடுக்கிறார். இவர்களுடன் இந்த பாடலில் பணிபுரிந்தது எனக்கு பெரிய அனுபவம்” என்று கூறியுள்ளார்.