தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லன் என்று இரு கதாபாத்திரத்திலும் நடித்து, இரண்டிலுமே தன் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்த நடிகர் மொட்டை ராஜேந்திரன் தற்போது தன் திரையுலக பயணம் குறித்து எமோஷனலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பிதாமகன்” என்ற படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திரையுலகிற்கு அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் வெளியான “நான் கடவுள்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம்தான் அவரது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் தொடங்கி பின்பு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய மொட்டை ராஜேந்திரன் வில்லனாகவும் காமெடியனாகவும் அசத்தி வருகிறார்.
அஜித், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான “50/ 50” படத்தில் நடித்திருந்தார். இவர் சுமார் 500 தென்னிந்திய படங்களில் இன்றுவரை நடித்திருப்பார்.
தற்போது தன் திரையுலக பயணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் “என்னை மொட்டை ராஜேந்திரன் என்று அனைவரும் அன்போடு அழைத்து வருகிறார்கள். என்னுடைய வீட்டில் என் அண்ணன்கள் இரண்டு பேர் மற்றும் என் தந்தை ஆகிய மூவருமே சினிமாவில் சண்டை கலைஞர்கள்தான். அவர்களைப் பின்பற்றி நானும் சண்டை கலைஞனாக திரையுலகில் கால் வைத்தேன். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் சண்டை கலைஞராக பணிபுரிந்துள்ளேன். இயக்குனர் பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் சண்டை கலைஞராக கலந்துகொண்டு எனக்கு, ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பளித்தார். மேலும் நான் கடவுள் படத்தில் எனக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் ஒரு பக்கம் நடிக்க முடியுமா? என்ற தயக்கமும் இருந்தது. என் பயத்தை போக்கும் விதமாக பாலா அவர்கள் என்னை சமாதானப்படுத்தி எனக்கு ஊக்கமளித்து நடிக்க வைத்தார். அவரும் கேமராமேன் வில்சன் அவர்களும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றது முதல் என்னை அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. என் முதல் குரு என் முதல் தெய்வம் இரண்டுமே பாலா சார் தான். பின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அந்தப் படமும் வெற்றி பெற்றது. சண்டை கலைஞனாக ஆரம்பித்த என் பயணம் பின்பு வில்லன் பின்பு காமெடி நடிகர் என்று தற்போது போய்க்கொண்டிருக்கிறது. என்னை தற்போது அனைவரும் மொட்டை ராஜேந்திரன் என்று அன்போடு கூப்பிடும் அளவிற்கு நான் தெரிய வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம்” என்று எமோஷனலாக வீடியோவில் பேசியுள்ளார்.