பாலு சீக்கிரமா எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன்… இளையராஜாவின் உருக்கமான வீடியோ பதிவு!
August 15, 2020 / 12:17 PM IST
|Follow Us
தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். சமீபத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவில் “எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. பின், மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் லேசான அளவில் ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்க என்று சொன்னார்கள்.
இருப்பினும் நான் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார். நேற்று இவர் அட்மிட் ஆகியிருக்கும் மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு, எங்களது சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டிருந்தது. தற்போது, இது தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் “பாலு சீக்கிரமா எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவது அல்ல. சினிமாவோடு தொடங்கியதும் அல்ல.
எங்கேயோ மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி, அந்த இசை நமது வாழ்வாகவும், நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளிலே ஆரம்பித்த நமது நட்பும் இசையும், இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றை ஒன்று பிரியாமல் இருக்கிறதோ.. அதே போல உனது நட்பும், என்னுடைய நட்பும். நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்ததில்லை. நாம் சண்டை போட்டாலும் சரி, நம் இருவருக்குள் சண்டையிருந்தாலும் அது நட்பே, சண்டையில்லாமல் போன போதும் அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா” என்று பேசியுள்ளார்.