தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தப் படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் OTTயில் வெளியாவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பலர் இதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தாலும் இவருக்கு ஆதரவும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி இந்தப் படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது அமேசான் இந்த படத்திற்கு கொடுத்த தொகை குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்புக்காக 60 கோடி ரூபாய் செலவானதாகவும், அந்த மொத்த தொகையும் அமேசான் கொடுத்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ஆகியவை சுமார் 40 கோடிக்கு விலை போனதாகவும், அதனால் தற்போது இந்த படம் 100 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
இதில் புதிய தகவல் என்னவென்றால் சன் தொலைக்காட்சி நிறுவனம் 15 கோடிக்கு சூரரைப்போற்று திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாகவும், வருகிற 2021 பொங்கல் பண்டிகை என்று இந்த படம் சன் டிவியில் வெளியாகும் என்றும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சூரரைப்போற்று ஓடிடியில் வெளியாவது குறித்து பல எதிர்ப்புக் குரல்கள் வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.