சர்ச்சையில் சிக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
September 17, 2020 / 08:00 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.
மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல் – ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட படத்தின் நான்கு பாடல்களும் (மாறா தீம், வெய்யோன் சில்லி, மண்ணுருண்ட, காட்டுப் பயலே) சூர்யா ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பெற்றது.
இப்படம் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகப்போகிறது. இந்நிலையில், படத்தின் ‘மண்ணுருண்ட’ பாடலில் இடம்பெற்றிருக்கும் “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா” போன்ற வரிகள் சாதிப் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக். இவ்வழக்கை விசாரித்த நிதிபதி, இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.