நிறைவேறாமல் போன விவேக்கின் அந்த ஆசை… ‘விஸ்வாசம்’ தயாரிப்பாளர் ட்வீட்!
April 17, 2021 / 08:31 PM IST
|Follow Us
‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மற்றும் லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 15-ஆம் தேதி) தான் நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பின், நேற்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார்.
தற்போது, இது தொடர்பாக ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தியாகராஜன் ட்விட்டரில் “பத்மஸ்ரீ திரு.விவேக்கின் மறைவு நம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம்.
ஆம்.. கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து, எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பல முறை கதை ஆலோசனையிலும் ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடத்திக் கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.