“எனது ஞானத்தகப்பனை இழந்து விட்டேன்”… எழுத்தாளர் கி.ரா மறைவு குறித்து சிவக்குமாரின் உருக்கமான பதிவு!
May 18, 2021 / 08:08 PM IST
|Follow Us
பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நேற்று (மே 17-ஆம் தேதி) நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் உட்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது, கி.ராஜநாராயணனின் மறைவு தொடர்பாக பிரபல நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன்.
தற்போது 80 வயதில் எனது ஞானத்தகப்பனான, 99 வயது வாழ்ந்த கிரா அவர்களை இழந்து விட்டேன். கிரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கும், அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன்.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.