சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் கடந்த ஜூன் 4-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார்.
இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். தற்போது, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் “தமிழர்களுக்கெதிரான ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். தவறினால், ‘அமேசான்’ நிறுவனத்தின் எல்லா சேவைகளையும் உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டு ‘அமேசான் ப்ரைம்’ தலைமை அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “வணக்கம்! உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 04, 2021 அன்று உங்களது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், ‘தி ஃபேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகி, தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள அத்தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன். அறத்தின் வடிவமாய், ஒழுக்கத்தின் உருவமாய், கண்ணியத்தின் தோற்றமாய்க் களத்தில் நின்று, இலட்சியத்தை முழுதாய் நெஞ்சிலேந்தி, நச்சுக்குண்டுகளின் கொடும் தாக்குதல்களுக்கு ஆட்பட்டப்போதும் தடம்பிறழாது தனது பாதை மாறாது, மரபுவழிப்போரையே முன்னெடுத்து, இறுதிவரை போர் மரபுகளையும், மனித மாண்புகளையும் கடைப்பிடித்துச் சமரசமற்று சண்டையிட்ட தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளை மிக மோசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தோற்றம் கொள்ளச்செய்து காட்சிப்படுத்தியுள்ள இத்தொடர் மிகுந்த உள்நோக்கம் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் இணையத்தொடரை உருவாக்கியிருப்பதற்கு எனது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன். சிங்களப் பேரினவாதம், இந்திய ஒன்றியம் உள்ளிட்ட சில உலக நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஒருமித்து ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலையில் 2 இலட்சம் தமிழர்களைச் சாகக்கொடுத்துவிட்டு அதற்கான எந்த நீதியையும் பெற முடியா கையறு நிலையில், உலக அரங்கில் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டுப் போராடிக் கொண்டிருக்கையில் தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தையோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியையோ, அங்கு நடந்த உண்மைச்செய்திகளையோ, ஈழ விடுதலைப்போராட்டத்தின் பெரும் வரலாற்றையோ பதிவுசெய்ய வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது தமிழர்களுக்கெதிராக நச்சுக்கருத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்துருவாக்கங்களைக் கொண்டுள்ள இதுபோன்ற இணையத்தொடர்கள் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.
இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை மீண்டும் உரைக்கிறேன். ஈழப்போர் முடிவுற்று, 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்காலச்சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்டப்போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச்சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டுச்சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதிகோரி நிற்கிறோம்.
போர் மரபுகளுக்கு மாறாக ஒற்றை நகர்வையும் முன்வைத்திடாது, அழித்தொழிக்கப்படும் நாள்வரையிலும்கூட சிங்களர்களின் அந்நிய ஆதிக்கத்துக்கெதிராக மட்டுமே போராடி, சிங்கள மக்களைக் குறிவைக்காது, தமிழர்களின் அறத்தையும், மறத்தையும் நிலைநாட்டி, தமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்புப் பேரரணாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும், தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் மிகத்தவறாக உலகத்தினருக்குக் காட்ட முற்படும் இத்தகைய இணையத்தொடர் உடனடியாகத் தடைசெய்யப்பட்டு நீக்கப்பட வேண்டுமென்பதுதான் தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது. இம்மண்ணின் மக்கள் மீதும் உண்மைக்கு மாறான திட்டமிட்ட அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பச்சைப்பொய்களைக் காட்சிகளாக உருவாக்கி, வரலாற்றுத்திரிபுகளைத் செய்து வரும், ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒட்டுமொத்த தமிழின மக்களையும் பெருமளவில் காயப்படுத்துகிறது.
ஈழத்தில் நடைபெற்ற தமிழர் இனஅழிப்புப்போரை, இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களிடையேயும், அவர்களின் பிரதிநிதிகளிடையேயும் எடுத்துரைத்து அநீதிக்கெதிரான களத்தில் எங்களோடு மற்றமொழிவழி தேசிய இன மக்களையும் இணைத்து, கரம்கோர்த்து நிற்க, எங்களுக்கான ஆதரவுத்தளத்தை மாநிலங்களைக் கடந்து இந்தியாவெங்கும் உருவாக்கும் முன்முயற்சியில் இறங்கியிருக்கிற வேளையில், அதனை முற்றாகத் தகர்த்து, ஈழ விடுதலைப்போராட்டம் குறித்து மிகத் தவறான புரிதலை மற்ற இனங்களிடையே உருவாக்கி, எம்மினத்தின் விடுதலைப்போரை வன்முறை வெறியாட்டமாகவும், பயங்கரவாதப்போராகவும் காட்ட முனைகிற செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இத்தகைய இணையத்தொடருக்கு தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக்கோரி இந்திய ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவ்வாறு செய்யத்தவறி எங்கள் உணர்வுகளை அலட்சியம் செய்து உதறித்தள்ளினால், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து, ‘அமேசான் ப்ரைம் வீடியோ’ உட்பட அமேசான் நிறுவனத்தின் எல்லாச் சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் கருத்துப் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி” என்று கூறியுள்ளார்.
Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs all over the world may have to lead a Massive Campaign to Boycott all @amazon Services, including Prime Video.https://t.co/eMCi1AqP8m@aparna1502 @PrimeVideoIN pic.twitter.com/czbSElgnM7
— சீமான் (@SeemanOfficial) June 6, 2021
தமிழர்களுக்கெதிரான #TheFamilyMan2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். தவறினால், @amazon நிறுவனத்தின் எல்லா சேவைகளையும் உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம்.@aparna1502 @PrimeVideoIN pic.twitter.com/1Mk9muc2bb
— சீமான் (@SeemanOfficial) June 6, 2021