விமான நிலையத்தில் நடந்த தாக்குதல்… விஜய் சேதுபதியிடம் ரூ.3 கோடி கேட்டு அவதூறு வழக்கு போட்ட நடிகர் மகா காந்தி!
December 7, 2021 / 09:14 PM IST
|Follow Us
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், பெங்களூரு விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் திடீரென ஓடி வந்து தாக்கிய வீடியோ பதிவு வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.
இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபரின் பெயர் மகா காந்தி என்றும், அவர் ஒரு நடிகர் என்றும் தெரிய வந்தது. மேலும், அவர் குடிபோதையில் இருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது என்றும் விஜய் சேதுபதி தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது, நடிகர் மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர் கொடுத்திருந்த மனுவில் “கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தான் நான் பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அப்போது விஜய் சேதுபதியை சந்தித்தவுடன், அவரது சாதனைகளை பற்றி பாராட்டி பேச அருகில் சென்றேன். ஆனால், விஜய் சேதுபதியோ என்னை பற்றியும், என் சாதி பற்றியும் தவறாக பேசினார்.
பின், விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் என்னை தாக்கினார் அதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜான்சன் என்னை மீண்டும் தாக்க வருகையில் தான், நான் அவரை எட்டி உதைத்தேன். ஆனால், விஜய் சேதுபதி தரப்பினரோ மீடியாவில் என்னை பற்றி தவறாக பேசி பேட்டி கொடுத்து விட்டனர். ஆகையால், நான் நடிக்கவிருந்த ஆறு படங்களில் இருந்து என்னை நீக்கி விட்டனர். இதனால் எனக்கு ரூ.3 கோடி இழப்பீடு வேண்டும்” என்று கூறியுள்ளார்.