BMW எக்ஸ் 5 கார் வழக்கு… விஜய்யிடம் அபராதம் வசூலிக்க இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!
January 29, 2022 / 11:11 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது.
விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து 2005-ஆம் ஆண்டு BMW எக்ஸ் 5 காரை (விலை : ரூ.63 லட்சம்) இறக்குமதி செய்தார் விஜய். பின், இந்த காருக்கான மாநில நுழைவு வரியை செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு விஜய் ரூ.7.98 லட்சத்தை செலுத்தினார். அதன் பிறகு நுழைவு வரி செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதற்காக விஜய்-க்கு ரூ.30.23 லட்சம் அபராதம் விதித்தது தமிழ்நாடு வணிகவரித்துறை.
இதனைத் தொடர்ந்து இந்த வணிகவரித்துறை விதித்த இந்த அபராதத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் விஜய். இந்நிலையில், இன்று (ஜனவரி 28-ஆம் தேதி) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் “விஜய்-க்கு அபராதம் விதித்ததற்குரிய ஆவணங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு இந்த வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை விஜய்யிடம் அபராதத்தை வசூலிக்க எந்த ஒரு நடவடிக்கையும் வணிகவரித்துறை எடுக்க கூடாது” என்று கூறியுள்ளார்.