2010 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் “மதராசபட்டினம்”. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஏமிஜாக்சன் நடித்திருப்பார்.
இந்த படம் மூலம்தான் அவர் தமிழ்த் திரைப்படவுலகிற்கு அறிமுகமானார். இந்தப்படத்தில் இவர்களுடன் நாசர், கொச்சின் ஹனீபா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள்.
தன் முதல் படத்திற்காக தன்னுடைய தாய் நாட்டிலிருந்து முதல் முதலாக வேறு ஒரு நாட்டிற்கு வந்திருந்தார் ஏமி ஜாக்சன். இந்த படப்பிடிப்பின் அனுபவம் குறித்து ஏமிஜாக்சன் பகிர்ந்து கொண்டபோது, தனக்கு இந்தப் படப்பிடிப்பு முற்றிலும் புதுமையான அனுபவமாக இருந்ததாகவும், நடனம், நடிப்பு, மொழி படப்பிடிப்பு தளம், இந்த நாட்டின் கலாச்சாரம் அனைத்துமே தனக்கு புதியது என்றும், அதனால் தன் முழு உழைப்பையும் இதில் கொடுத்து நல்ல படைப்பை தர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் நடிப்பதற்கு முன்பு இந்த நாட்டின் கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இது பற்றி பேசும் பொழுது இயக்குனர் விஜய் “அவர் முதல் முதலாக இந்தியாவிற்கு வந்த பொழுது ஏமிஜாக்சனை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றிருந்தேன். அப்போது அவர் சாலையில் இருந்த பசுவைப் பார்த்து அங்கு பாருங்கள் சாலையில் பசு நிற்கிறது என்று ஆச்சரியமாக கூறினார். அப்போது என் மனதில் நினைத்துக் கொண்டேன், இன்னும் என்னென்ன விலங்குகளை பார்த்து என்னென்ன சொல்ல போறாளோ “என்று நகைச்சுவை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும் எமிஜாக்சன் இளகிய மனம் குறித்து ஒரு கதையை பகிர்ந்து கொண்டார் விஜய். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் சாலையில் அதிக வெயில் இருக்கும் நேரத்தில் ஷுட்டிங் நடைபெற்று வந்ததாம். அப்போது படப்பிடிப்பிற்காக வந்த குதிரையை வெயிலில் நிறுத்தி வைத்திருந்தார்களாம். அப்போது காரைவிட்டு அழுதுகொண்டே இறங்கி இயக்குனர் விஜய்யை நோக்கி எமிஜாக்சன் ஓடி வந்தாராம். அதைப்பார்த்து பதறிப்போய் விஜய் என்னவென்று கேட்ட பொழுது, சாலையில் வெயிலில் கஷ்டப்படும் குதிரையைக் கண்டு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி அழுதாராம். அதனால் உடனடியாக ஒரு கூடாரம் அமைத்து அந்த குதிரையை நிழலில் நிறுத்தி அதற்கு உணவளித்து பார்த்துக் கொண்டார்களாம். அதன்பின்தான் மனநிம்மதி அடைந்தாராம் ஏமிஜாக்சன். இதைப்பற்றி கூறி எமிஜாக்சனுக்கு விலங்குகள் மீது கொண்ட பாசத்தை விளக்கியுள்ளார் ஏ.எல்.விஜய்.