இந்துமதம் பற்றி அவதூறாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குனர் கைது!

  • July 31, 2020 / 01:49 PM IST

சமீபத்தில் கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தற்போது இந்து மதத்தை பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக தமிழ் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முருகக் கடவுளின் கந்த சஷ்டி கவசம் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்கள்.

இதையடுத்து போலீசில் புகார் அளித்து குண்டர் சட்டத்தில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளை கைது செய்தனர். அதுமட்டுமின்றி அந்த சேனலிலில் இருக்கும் அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 1989ஆம் வருடம் வெளியான “நாளைய மனிதன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனர் வேலுபிரபாகரன், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, இந்து மதக் கடவுள்களை பற்றி தவறான கருத்துகளை சர்ச்சைக்குரிய வகையில் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் மகேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் அவர் ” இயக்குனர் வேலுபிரபாகரன் இந்து மக்கள் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை ஒரு பேட்டியில் பதிவிட்டுள்ளார். இவர் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரை அடுத்து இயக்குனர் வேலுபிரபாகரன் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக செய்தி வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus