சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
ஆனால், டிக்கெட்கள் அதிகமாக விற்கப்பட்டதால் ரசிகர்கள் பலர் நிற்க கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மேலும், பலர் உள்ளே கூட செல்ல முடியாமல் திரும்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தனர். இருப்பினும் இச்சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, இந்நிகழ்ச்சியை நடத்திய ACTC நிறுவனர் ஹேமந்த் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் “‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். தயவு செய்து சமூக வலைத்தளங்களில் ரஹ்மான் சாரை தாக்கி பதிவிட வேண்டாம். டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனவர்களுக்கு கண்டிப்பாக அவர்களது பணம் விரைவில் திருப்பி அளிக்கப்படும்” என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.