ஜெயலலிதாவின் உதவியாளர் சொன்னதுபோல் அஜித் அரசியலில் என்ட்ரியாகப்போகிறாரா?… அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா போட்ட ட்வீட்!

  • March 29, 2022 / 07:08 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் “காலை நண்பர்களோடு நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது என்னுடைய நண்பர்களில் ஒருவர் திரையரங்கில் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். உடனே நான் எதுவும் டிக்கெட் முன்பதிவு செய்து தர வேண்டுமா? என்று கேட்டேன். ஆமாம் அண்ணா, நாளை அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் வெளிவருகிறதல்லவா! என்று உற்சாகத்துடன் சொன்னார்.

‘வலிமை’ திரைப்படம் புரட்சித்தலைவியின் பிறந்தநாளான 24ஆம் தேதி வெளியிடப்படுவது குறித்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். ‘வலிமை’ திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் அம்மா அவர்களின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படம் அம்மா பிறந்த நாளில் வெளிவர இருக்கின்றது. இது குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார். புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா? அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தேன். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமியான நாளை படம் வெளிவருவது ஆச்சரியம் தானே! அஜித் அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வெளியிடப்படுகிறதா? என்பதற்கு வந்த பிறகே விடை கிடைக்கும்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் எங்களின் திருநாளான தாயின் பிறந்தநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் “அஜித் சாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus