தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பெஞ்சமின். இவர் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’, விக்ரமின் ‘அருள்’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘வசூல் ராஜா MBBS’, ‘தளபதி’ விஜய்யின் ‘திருப்பாச்சி’, சரத்குமாரின் ‘ஐயா’, ‘தல’ அஜித்தின் ‘திருப்பதி’, தனுஷின் ‘வேங்கை’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடந்த வாரம், நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் “அனைவருக்கும் வணக்கம்.
நான் நடிகர் பெஞ்சமின் பேசுறேன். heart attack வந்து சேலத்துல ரெண்டு மூணு நாள் treatment எடுத்தேன். இங்க operation பண்ற அளவுக்கு வசதி இல்லை. பெங்களூர் நாராயணா இருதய மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக சொல்லியிருக்காங்க. இப்ப பெங்களூர் போயிட்டு இருக்கோம். எவ்வளவு செலவு ஆகப் போகுதுன்னு தெரியல. நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவ உதவி செய்யக்கூடிய நண்பரிடம் சொல்லி ஏதாவது மருத்துவ உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி” என்று பேசியிருந்தார்.
தற்போது, நடிகர் பெஞ்சமின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “PRAISE THE LORD. அனைவருக்கும் வணக்கம். உங்களால் நான் இன்று உயிர் பிழைத்து, மறுபிறவி எடுத்து இருக்கிறேன். எனக்கு பெங்களூர் நாராயணா இருதய மருத்துவமனையில் சிகிச்சை அளித்த தலைமை மருத்துவர் திரு. ஜே. கண்ணன் சார் அவர்களுக்கும், அவரது உதவி மருத்துவரான, எனது வகுப்புத் தோழன் திரு.முத்துசாமி தலைமை ஆசிரியர் அவர்களின் புதல்வர் டாக்டர். திரு. மௌலிஸ் அவர்களுக்கும், மருத்துவமனை மேலாளர் திரு மனோகரன் சார் அவர்களுக்கும், என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட செவிலியர்களுக்கும் மிக்க நன்றி.
ஆஞ்சியோகிராம் செய்து மார்பில் ஏற்பட்ட இரண்டு அடைப்பையும் சரி செய்து, இரண்டு ஸ்டண்ட் வைத்திருக்கிறார்கள். சிகிச்சை முடிந்து நல்லபடியாக சேலத்தில் உள்ள வீடு வந்து சேர்ந்தேன். எனக்காக வேண்டிக் கொண்டு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், என் அன்பு நண்பன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் வின்னர் திரு. மூக்குத்தி முருகன் அவர்களுக்கும், நடிகர் பிளாக் பாண்டி அவர்களுக்கும், சேலம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் திரு. பார்த்திபன் குழுவினருக்கும், சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் உரிமையாளர் திரு.காசிம் பாய் அவர்களுக்கும்.
சேலம் மேற்கு தாசில்தார் திரு ரமேஷ் குமார் அவர்களுக்கும், ஏடிசி கண்ணன் அவர்களுக்கும், சேலம் இம்மானுவேல் ஆலய போதகர் ஐயா அவர்களுக்கும், வக்கீல் சதீஷ்குமார் அவர்களுக்கும், என்னை சரியான சமயத்தில் 14.12.2020 அன்று சேலம் கிருபா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த எனது வாகன ஓட்டுநர் திரு. சாமுவேல் அவர்களுக்கும், எனது எதிர் வீட்டில் குடியிருக்கும் திரு. செந்தில் அண்ணன் அவர்களுக்கும், எனது மனைவிக்கும், எனது மனைவியின் சகோதரிகளுக்கும், என் உடன் பிறந்த சகோதரிகளுக்கும், எனக்கு முதலுதவி மருத்துவம் செய்த சேலம் கிருபா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும்.
பெங்களூர் மருத்துவமனைக்கு 16.12.2020 அன்று தனது காரில் என்னை சேலத்திலிருந்து அழைத்துச் சென்று, வெற்றிகரமாக சிகிச்சை முடித்து, 20.12.2020 அன்று மீண்டும் என்னை சேலத்தில் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த எனது தங்கையின் கணவர் கிருஷ்ணகிரி கே ஜி எஸ் டிராவல்ஸ் உரிமையாளர் திரு. ராஜா என்கிற ஜெயசீலன் அவர்களுக்கும், எனக்காக அன்றிலிருந்து இன்றுவரை பொருளாதார உதவி செய்து கொண்டிருக்கும் என் தமிழ் உடன்பிறப்புகளுக்கும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும், இயக்குனர் நடிகர் அண்ணன் திரு சமுத்திரக்கனி அவர்களுக்கும்.
தர்மபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைவருமான ஐயா திரு. ஆர். ரத்தினசாமி.ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கும், அனைத்து ஊடக நண்பர்களுக்கும், எங்கள் பிஆர்ஓ கோவிந்தராஜ் சார் அவர்களுக்கும், என் வளர்ச்சியில் என்றுமே உறுதுணையாக இருக்கும் எனது குருநாதர் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் ஐயா அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.மதுரை மோகன் அவர்களுக்கும், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வம் திரு.சமுத்திரக்கனி அண்ணன் அவர்களின் உதவியாளர் திரு விவேக் சார் அவர்களுக்கும், எனக்கு உயிர் பிச்சை அளித்த நான் வணங்கும் கடவுள், இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை காண செய்த என் இறைமகன் இயேசுவுக்கும் நன்றிகள் கோடான கோடி. என்றும் நன்றியுடன், உங்கள் அன்பு சகோதரன்… திருப்பாச்சி பெஞ்சமின்” என்று கூறியுள்ளார்.