பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாடகி லதா மங்கேஷ்கர், ‘பூ’ ராமு என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் பிரதாப் போத்தன். இவர் தமிழில் ‘அழியாத கோலங்கள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘இளமைக்கோலம், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக்கிள்ளாதே’ போன்ற பல படங்களில் நடித்தார்.

பிரதாப் போத்தன் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் ‘மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன்’ போன்ற படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். பிரதாப் போத்தனின் முதல் மனைவி பிரபல நடிகை ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பிரதாப் போத்தன் நடிப்பில் மூன்று மலையாள படங்கள் லைன் அப்பில் இருந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 15-ஆம் தேதி) காலை நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உயிரிழந்தார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.