“பருத்திவீரன்” படத்தில் பாடிய பாடகருக்கு உதவிய நடிகர் கார்த்தி!
July 27, 2020 / 12:48 PM IST
|Follow Us
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, “பருத்திவீரன்” படத்தில் பாடிய கிராமிய பாடகியான லட்சுமி அம்மாள் என்பவரின் சமீபத்திய நிலையை கேட்டறிந்து அவருக்கு உதவியுள்ளார்.
கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் அமீர் சுல்தான் இயக்கத்தில் 2007ஆம் வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான “பருத்திவீரன்” திரைப்படத்தில் வரும் “ஊரோரம் புளியமரம்” மற்றும் “டங்கா டுங்கா” என்ற பாடலை பாடியதன் மூலம் புகழ்பெற்றார்.
தற்போது அவர் அன்றாட வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு வருவதாகவும், கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள தங்க இடமின்றி தவித்து வருவதாகவும் கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி தன் ஃபேன் கிளப் உறுப்பினர்கள் மூலம் இவருக்கு உதவியுள்ளார். தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் சூர்யா போலவே இவருக்கும் பெரிய மனது என்று அவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
கார்த்தி ஃபேன் கிளப் உறுப்பினர்கள் இவருக்கு பத்தாயிரம் ரூபாய் தற்போது அளித்துள்ளதாகவும், மாதம் மாதம் இவரின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.ஒரு நேர்காணலில் இதை பற்றி கூறியுள்ள லட்சுமி அம்மாள் நடிகர் கார்த்திக்கு மனமுவந்து நன்றி கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் “சுல்தான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கதையின் திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.