இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில்,அதன் பாதிப்பு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி கேட்ட கேள்வி மக்களிடையே ஆதரவை பெற்றுள்ளது.
தமிழகத்தில் நான்காவது லாக்டவுன் முடிந்த நிலையில், இப்போதுதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் தினமும் நூற்றுக்கணக்கில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை பார்த்து அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்தநிலையில் சென்னைக்கு மட்டும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கொரோனா அறிகுறி இருந்து ஒருவர் பரிசோதிக்கப்பட்டால் அவர் 14 நாட்கள் தனிமைபடுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதைப்பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்விகளை எழுப்பியுள்ள நடிகை கஸ்தூரி “கொரோனா பரிசோதனை செய்யப்படும் நபர் 14 நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது ஏன் ?. பரிசோதனை முடிவு தான் இரண்டு மூன்று நாட்களில் வந்துவிடுமே பின்பு ஏன் அவர்கள் குவாரண்டைனில் 14 நாட்கள் இருக்க வேண்டும்? ”
என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “இதுதான் நிபந்தனை என்றால் அறிகுறி இருப்பவர்கள் கூட முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள மாட்டார்கள். அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறையும். ஒருவேளை இதுதான் அரசின் திட்டமோ? ” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து பலரும், கொரோனா பரிசோதனை தமிழகத்தில் சரியாக செய்யவில்லை என்றும், குறிப்பாக சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பிற்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.