பிரபல தமிழ் பட நடிகையான குஷ்பு ஒரு வாய்ஸ் நோட்டில் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
நடிகை குஷ்பூ பத்திரிக்கையாளர்களை பற்றி ஒரு ஆடியோவில் பேசியதாகவும், அந்த ஆடியோவில் அவர், இந்த பத்திரிகையாளர்களுக்கு வேறு வேலை இல்லை, COVID19 தவிர வேறு எந்த செய்தியும் இல்லாததால் ,சினிமாக்காரர்கள் பற்றி அவதூறாக பேசத் தொடங்கிவிடுவார்கள், அதனால் அவர்களுக்கு எந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த வாய்ஸ் நோட் குஷ்புவை பிரச்னையில் தள்ளியுள்ளது. சில தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து இந்த வாய்ஸ் நோட்டை வெளியிட்டதாகவும், அதில் அவர் பத்திரிக்கையாளர்களை ‘pressகாரன் ‘ என்று திட்டி இருப்பதாகவும் தெரிகிறது. இதைப் பற்றி நடிகை குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பதிவில் “எனது வாய்ஸ் நோட் எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது எங்கள் தயாரிப்பாளர்களுக்கான குரூப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது , எங்களுக்குள்ளே இவ்வளவு கீழ்த்தரமான புத்தி உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது அவமானமாக உள்ளது. நான் பத்திரிகையாளர்களை தவறாக பேசவில்லை. நண்பர்களுக்கு இடையில் பேசுவதுபோல மட்டுமே பேசி உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு என்றும் மிகுந்த மரியாதை இருக்கிறது. எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் யாரை பற்றியும் நான் அவதூராக பேசியதில்லை . அதை மீறி இந்த வாய்ஸ் நோட் யாரையேனும் காயப் படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யார் இதை வெளியிட்டார்கள் என்பது குறித்து குஷ்புவுக்கு தெரியும் என்றும் , தனது மௌனமும் மன்னிப்புமே அவருக்கு பெரிய தண்டனை என்றும் கூறியிருக்கிறார்.