1988ம் வருடம் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான “கலியுகம்” படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் பொன்னம்பலம். தற்போது உடல்நலக்குறைவால் அடையாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட உலக நாயகன் கமல்ஹாசன் இவருக்கு உதவி செய்துள்ளதாகவும், மேலும் தினமும் போன் செய்து இவர் உடல்நலம் குறித்து விசாரித்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது. மேலும் நடிகர் பொன்னம்பலத்தின் குழந்தைகளின் படிப்பு செலவை உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் பொன்னம்பலம் தமிழில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். நாட்டாமை, முத்து, இந்தியன் போன்ற பெரிய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
படங்களில் ஸ்டண்ட் மேனாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் கமலஹாசனுடன் “அபூர்வ சகோதரர்கள்” மற்றும் “மைக்கேல் மதன காமராஜன்” படத்தின் மூலம் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். 1994 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த “நாட்டாமை” படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் மூலம்தான் இவர் நடிப்பில் அடுத்த உயரத்தை எட்டினார்.
இதைத்தொடர்ந்து ரஜினியின் வில்லனாக “முத்து” படத்தில் தோன்றினார். இப்படி ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்து சினிமாவில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளார்.
இவர் கடைசியாக கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்2” நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதை தொடர்ந்து இவர் 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது கிட்னி ஃபெயிலியர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் பற்றிக் கேள்விப்பட்ட உலக நாயகன் கமல்ஹாசன், அவருக்கு உதவ முன்வந்து தற்போது அவரது மருத்துவ செலவுகளையும் பொன்னம்பலம் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுள்ளார் என்பது நெகழ்ச்சிகரமான செய்தியாகும்.