சினிமாவில் பாப்புலர் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் சகோதரரான இவர் அறிமுகமான முதல் படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’.
இதனைத் தொடர்ந்து ‘விக்ரம், சத்யா, ஜீவா, அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, மைக்கேல் மதன காம ராஜன், மௌனம் சம்மதம், குணா, மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், பூவே உனக்காக, குட்டி, வில்லன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, உன்னைப்போல் ஒருவன், 8 தோட்டாக்கள், கோலமாவு கோகிலா, தாராள பிரபு, சூரரைப் போற்று, கார்கி’ என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (வயது 66) இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.