நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்… இரங்கல் தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தீப்பெட்டி கணேசன். இவர் அறிமுகமான முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ரேனிகுண்டா’. பாப்புலர் இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கியிருந்த இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜானி நடித்திருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தீப்பெட்டி கணேசன் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருந்தார்.

‘ரேனிகுண்டா’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, அஜித்தின் ‘பில்லா 2’, விஷ்ணுவின் ‘நீர்ப்பறவை’, நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’, உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணே கலைமானே’ போன்ற படங்களில் தீப்பெட்டி கணேசன் நடித்திருந்தார். ‘கொரோனா’ லாக் டவுன் நேரத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வந்த தீப்பெட்டி கணேசனுக்கு விஷால் உட்பட பல பிரபலங்கள் உதவி செய்தனர்.

தற்போது, உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா” என்று கூறியுள்ளார்.

Share.