‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். அப்படி பேசியதில் சில வசனங்கள், இயக்குநர் சுராஜின் படங்களில் வந்தது தான்.
இயக்குநர் சுராஜ் இயக்கிய ‘தலைநகரம்’ படத்தில் ‘நாய் சேகர்’, ‘மருதமலை’ படத்தில் ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘கத்தி சண்டை’ படத்தில் ‘டாக்டர் பூத்ரி’ போன்ற கதாபாத்திரங்களில் வலம் வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. தற்போது, வடிவேலுவின் கால்ஷீட் டைரியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், ஒரு ஹாரர் காமெடி வெப் சீரிஸுக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக சுராஜ் அளித்த பேட்டி ஒன்றில் “சமீபத்தில் நான் வடிவேலுவை சந்தித்து, அவரை வைத்து படம் பண்ண ஒரு ஹாரர் காமெடி கதை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போக, இதை படமா பண்ணாம ஒரு வெப் சீரிஸாக பண்ணலாம்னு சொன்னார். இப்போ வெப் சீரிஸுக்கு ஒரு ஒன்பது எபிசோடுகள் வர்ற மாதிரி நான் கதையை எழுதி முடித்து விட்டேன். பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களான ‘ஹாட் ஸ்டார்’ மற்றும் ‘அமேசான் ப்ரைம்’-களிடம் வடிவேலு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என்று தெரிவித்துள்ளார்.