தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’-யில் சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டியிருந்தார் விஷால். லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ மெகா ஹிட்டானதும், நடிகர் விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத் திரை, அயோக்யா’ என படங்கள் குவிந்தது. விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது, நடிகர் விஷால் நடிப்பில் ‘சக்ரா, துப்பறிவாளன் 2’ மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வணக்கம். எனது பிறந்த நாளில் என் பாசத்திற்கும், பெருமைக்குரிய அன்பு ரசிகர்களின் விருப்பத்தின்படி Common DP, Mashup வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட என் அன்பான நண்பர்களுக்கு நன்றி. மக்கள் நல இயக்கத்தின் சார்பாக மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை வாரியாக கொரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் அரசு கோட்பாடுகளின்படி நீங்கள் செய்த அனைத்து சமூக செயல்பாட்டினைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
மேலும் எனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், தொலைக்காட்சி அன்பர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாளை சிறப்படையச் செய்கிறது. கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து நம் மக்களை காப்பது நமது கடமை. இந்தியனாக தேசத்தை பாதுகாப்பது நம் பெருமை. கொரோனாவை ஒழிப்போம்! இயன்றதை செய்வோம்! இல்லாதவர்களுக்கு!!” என்று கூறியுள்ளார்.
Thanking Everyone From The Bottom Of My Heart….GB pic.twitter.com/C7gW7TeRqg
— Vishal (@VishalKOfficial) August 30, 2020