சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. 1986-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘கலியுக பாண்டவுலு’. வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை கே.ராகவேந்திரா ராவ் இயக்கியிருந்தார். இதில் வெங்கடேஷிற்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். இது தான் குஷ்பூ ஹீரோயினாக என்ட்ரியான முதல் படமாம். இதன் பிறகு 1988-ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானார்.
‘தர்மத்தின் தலைவன்’ படத்திற்கு பிறகு நடிகை குஷ்பூவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மைக்கேல் மதன காம ராஜன், சின்ன தம்பி’ என படங்கள் குவிந்து 100 தமிழ் படங்களுக்கு மேல் நடித்து விட்டார். குஷ்பூ தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2000-யில் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக குஷ்பூ நடித்த தமிழ் படம் ரஜினியின் ‘அண்ணாத்த’. இப்போது இவர் நடிப்பில் ‘ஹரா’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், குஷ்பூ மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “ரொம்ப மோசமான திருமண வாழ்க்கை தான் என்னுடைய அம்மாவுக்கு அமைந்தது.
எனது 8 வயதில் என்னுடைய அப்பாவால் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அப்போது அந்த வயதில் என்னால் அவருக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை. நான் இதை சொன்னால், அம்மா இதை நம்புவார்களா? இதனால் எனது குடும்பத்தினருக்கு ஏதேனும் பிரச்சனை வருமோ? என்று பயந்தேன். என்னுடைய 15-வது வயதில் தான் எனது அப்பாவுக்கு எதிராக பேச ஆரம்பித்தேன். என்னுடைய 16-வது வயதில் அப்பா எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்” என்று பேசியுள்ளார்.