அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா அதற்கான சில கோரிக்கைகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார்
இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் போராடிவரும் இந்த நேரத்தில், நடிகை ஸ்ரீப்ரியா சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்க செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் எண்ணற்ற பெண்களின் மாதாந்திர சுகாதார பிரச்சனை தீர்க்கப்பட்டது எனலாம். இவரின் ட்வீட்டிற்கு உடனடியாக பதில் அளித்த சுகாதரத்துறை செயலாளருக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். அவர் சமீபமாக வெளியிட்டிருக்கும் காணொளியிலும் சில நல்ல யோசனைகளையும் முன்வைத்திருக்கிறார்.
ஒட்டுமொத்த மக்கட்தொகையும் அடிக்கடி கைகளை சுத்தபடுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கைகழுவும் சோப்பும், சானிடைசரும் கிடைப்பதில் நடைமுறையில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இப்பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறையே நிலவுகிறது. இதனைத் தவிர்த்திட, அரசு இந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களது தயாரிப்புகளை பொது மக்களுக்கு மலிவு விலையிலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் விநியோகம் செய்திட உரிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் மக்களின் பொது சுகாதாரம் மேம்படுவதால், நோய் பரவுவதும் கட்டுப்படுத்தப்படும். இந்த பொருட்களை அன்றாடம் வீட்டுக்கு வந்து உடல்நலம் விசாரிக்கும் மாநகராட்சி ஊழியர்களிடமே கொடுத்து விநியோகமும் செய்திடலாம் என்பதும் ஒரு கூடுதல் யோசனை. அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது கழிப்பிடங்கள் இந்த பேரிடர் காலத்தில பராமரிப்பதைப் போல் என்றும் பராமரிக்கப்படவேண்டும…
இந்த யோசனைகளை சேன்ஜ்.ஓஆர்ஜி [CHANGE.ORG] என்ற இணையதளத்திலும் ஒரு மனுவாக பதிவு செய்துள்ளார்,அதிகமானகையொப்பங்கள் தான் அதை அரசின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்லும் .அதற்கு அனைவரும் அவசியம் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறார் ….
இந்த முயற்சி இவ்வுலகத்தில் நம்மோடு வாழ்ந்து வரும் சக மனிதர்கள் அனைவருடைய சுகாதாரமும் மிக மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது, தனிமனித சுகாதாரம், ஒரு வீட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும். வீடுகளின் சுகாதாரமே நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும். நாம் அனைவருமே மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் அதனை ஏனோ உருவாக்க முயல்வதில்லை. வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திடலாம் என்கிறார் ஶ்ரீப்ரியா