“பெண்கள் அதிக அளவில் கல்வி கற்க வேண்டும்”- நடிகை டாப்ஸியின் முயற்சி!

  • August 1, 2020 / 07:30 PM IST

2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “ஆடுகளம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. நடிகை டாப்ஸி இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். “ஆடுகளம்” படத்தை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் போன்ற தமிழ் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது “ஜன கன மன” என்ற படத்தில் நடித்து வரும் இந்த அழகுப் பதுமை நல்ல நடிகை மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட.

சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயார் செய்து வந்தார். அவர் பெற்றோர் நகைகளை அடமானம் வைத்து தான் கல்விக்கு பணம் கட்டி வந்துள்ளனர். தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் மாணவிக்கு போன் வாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார்கள். இதைக் கேள்விப்பட்ட டாப்ஸி அந்த மாணவிக்கு சர்ப்ரைஸாக ஐபோன் பரிசளித்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கூறியுள்ளதாவது “எனக்கு டாப்ஸி மேடம் ஐபோன் வாங்கி பரிசளித்துள்ளார். என்னால் நம்பவே முடியவில்லை. கனவில் கூட நான் ஐபோன் வாங்குவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை. கண்டிப்பாக நான் நீட் தேர்வில் டாப்ஸி மேடம் ஆசியால் வெற்றி பெறுவேன்” என்று உணர்ச்சிவசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகை டாப்ஸி கூறியுள்ளதாவது ” பெண்கள் அதிக அளவில் கல்வி கற்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு அதிகமான டாக்டர்கள் தேவை. நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கான எனது சிறிய முயற்சிதான் இது. இதை நான் செய்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை அவரது ரசிகர்கள் பாராட்டியும் அவரது பிறந்த நாளையொட்டி இன்று அவருக்கு வாழ்த்துக்களை குவித்தும் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus