வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம்!

  • June 18, 2020 / 07:21 PM IST

வருகிற ஜூன் 27ஆம் தேதி வனிதா விஜயகுமார் பீட்டர்பால் என்பரை திருமணம் செய்யவிருப்பதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.இது அவருக்கு மூன்றாவது திருமணமாகும்.

1995 ஆம் வருடம் வெளிவந்த “சந்திரலேகா” படத்தின் மூலம் திரையுலகிற்கு வனிதா விஜயகுமார் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமாரின் மகள் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் எனும் சின்னத்திரை நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி எனும் மகன் இருந்தார். 2007ஆம் ஆண்டு இந்த ஜோடி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். மகன் யாரிடம் இருப்பது பற்றியான ஒரு பெரிய சர்ச்சைக்கு பின், விஜய் ஸ்ரீஹரி அவரது தந்தையிடமும் தாத்தாவிடமும் இருக்க வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ஆனந்த ஜே ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். பின் 2012ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணங்களால் இந்த ஜோடி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

சமீபத்தில் இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இதை உறுதி செய்து வனிதா தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் தனது வருங்கால கணவர் பீட்டர்பால் பற்றி கூறியபோது”என் வாழ்க்கையில் சில இன்னல்களை சந்தித்த போது இவர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.மேலும் நான் யூடியூப் சேனல் தொடங்கினேன். அதிலும் எனக்கு மிகவும் பக்கபலமாக உடனிருந்தார். இவருடன் இருக்கும்போது நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். இவர் என்னை திருமணம் செய்ய கேட்டபோது உடனே ஒப்புக் கொள்ள மனம் துடித்தாலும், என் மகள்கள் ஒத்துக் கொண்டால் மட்டுமே இதற்கு நான் ஒப்புக்கொள்வேன் என்று கூறி விட்டேன். ஆனால் என் இரண்டு மகள்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

வரும் ஜூன் 27 ஆம் தேதி இவர்களது இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி திருமணம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus