“இந்தியனை அடிக்கிறது ஒரு வெள்ளைக்கார பொம்மையா இருந்தாலும் அதை என்னால பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியாது…” – சேனாபதி
இதைவிட ஒரு சுதந்திர போராட்ட வீரனின் தேசபக்தியை வசனத்தில் எப்படி கொண்டு வர முடியும். அதுதான் சுஜாதா.
எழுத்தாளர், வசன கர்த்தா , விஞ்ஞானி என பல முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு. ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் பிரதி கிடைக்காமல் வெகுகாலம் தேடியலைந்து அலுத்துப்போன பின்னர்,”அதனை கண்டுபிடித்து தருபவருக்கு என் ராஜ்யத்தில் ஒரு பகுதியையும், என் மகளையும் மணமுடித்து தருகிறேன் ”என சுஜாதா ஒருமுறை வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.
இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். பரபரக்கும் எழுத்து நடை, அடுத்த பக்கத்தை படக்கென்று திருப்பி என்ன ஆச்சு என்று படிக்கும் படி நம்மை செய்யும் சுவாரஸ்யம் தான் சுஜாதாவின் ட்ரேட்மார்க் எழுத்திற்கு கிடைத்த வெற்றி.நைலான் கயிறு,அப்சரா போன்ற குறுநாவல்களிலும் தன்னால் மர்மம் இழையோடும் படைப்புகளை தரமுடியும் என்று நிரூபித்தவர் சுஜாதா.
காயத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சுஜாதா ரோஜா, இந்தியன், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கன்னத்தில் முத்தமிட்டாள், பாய்ஸ், செல்லமே, ஆயுத எழுத்து போன்ற பல திரைப்படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். முன்னணி இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னத்தின் ஆஸ்தான எழுத்தாளராக வலம்வந்தார்.
சுஜாத்தாவின் இன்றளவும் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. சுஜாதா கதைகளில் கணேஷும் வசந்தும் வெவ்வேறு வடிவங்களில் வருவார்கள்.அவரது வசனங்கள் இன்னமும் மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும். சுஜாதாவின் மறைவிற்கு பின் 100 கோடி வசூல் செய்த இயக்குனர்களின் திரைப்படங்கள் படுதோல்வியை அடைந்தன. இன்று இவர் நம்முடன் இல்லாவிடினும் இவரது கதைகள் இன்னும் பல வருடங்கள் இவ்வுலகில் அழியா சித்திரமாக பதிந்தே இருக்கும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுஜாதா!