விஜய்யை தொடர்ந்து சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட தனுஷ்!
August 4, 2021 / 05:06 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், மாறன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
தனுஷ் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்த தனது சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு செய்யக்கோரி 2015-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது, இவ்வழக்கில் நாளை (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில், இங்கிலாந்தில் இருந்து 2012-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விஜய், அதற்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை 13-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
மேலும், இந்த அபராத தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு விஜய் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார். பின், விஜய் தனக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த ஜூலை 27-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய்-க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்தனர். விஜய்-க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தான் நாளை தனுஷ் வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.