சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 6 படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் கடந்த மே 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இப்படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தது குறித்து பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அன்பிற்குரிய நண்பர்களே… நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்பிற்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதரவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும், என் பணியின் மீதும், அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும், பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
அண்மையில் நேர்காணலின் போது என்னிடம், ‘தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கையில் ‘எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு ‘புஷ்பா’வில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என பதிலளித்தேன். இருப்பினும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
‘புஷ்பா’ படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் உண்டு என்பதையும், திரையுலகை சார்ந்த சக நடிகர்கள், நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் புரிதலுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.