சினிமா தொழிலாளர்கள் நலன் : அஜித் எடுத்த அதிரடி முடிவு

  • May 20, 2020 / 03:26 PM IST

சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை இப்போது தொடங்க வேண்டாம் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முற்றிலுமாக முடங்கியிருந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியன் 2, மாஸ்டர், சக்ரா உள்ளிட்ட படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் வலிமை படத்தின் பணிகளும் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு முழுவதுமாக முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு படத்தின் பணிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்க்கு அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் பணிகள் தொடங்க இன்னும் சில மாதங்களாகும் என்றும் கூறப்படுகிறது.

வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருந்தது படக்குழு

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus