அஜித் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள் மீது வழக்கு!

  • May 6, 2020 / 09:24 AM IST

உலகம் முழுவதும் மே 1-ஐ உழைப்பாளர் தினமாக மக்கள் கொண்டாடும் நிலையில் ,நமது தமிழ் நாட்டில் அஜித்தின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அஜித்தின் ரசிகர்கள். வருட வருடம் அஜித்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி அஜித்திற்கு தங்களின் வாழ்த்தை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அனால் இந்த வருடம் கொரோனாவால் உலகமே பாதிப்படைந்துள்ள நிலையில், நமது தமிழகத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே தல அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போய்விடுமோ என்று அவரது ரசிகர்கள் மிகவும் மனம் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளிற்கு ஒருநாள் முன் டிவிட்டரில் பல திரையுலக நட்சத்திரங்கள் அஜித்தின் பிறந்தநாள் Common DP-ஐ பகிர்வதாக அறிவிக்க பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தனது பிறந்தநாள் சம்பந்தமான எந்தவொரு நிகழ்வுகளோ, அறிவிப்புகளோ வெளியிட வேண்டாம் என்று அனைத்து திரையுலக நட்சத்திரங்களுக்கும் அஜித்தின் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது ரசிகர்களையும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு அஜித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் அவரது ரசிகர்கள் அதனை மதிக்கவே இல்லையென்று தான் தோணுகிறது. டிவிட்டரில் அஜித்தின் பிறந்தநாள் டேக் உலக அளவில் ட்ரெண்டானது. அதுமட்டும் இல்லாமல் கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே தியாகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அஜித் ரசிகர்களான ராஜேஸ், ஆகாஷ், விஜயகுமார், மணி ஆகிய 4 பேர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தியாகசமுத்திரம் வயல் திடலில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று கேக் வெட்டியதோடு மட்டுமல்லாமல், பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதனை பெருமையாக தங்களது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தனர்.

இந்த தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறி அஜித்குமார் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அஜித் கூறியிருந்தபோதும், அதைமீறி அவரது ரசிகர்களின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus