முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.
சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. ‘வலிமை’ படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை இம்மாத (செப்டம்பர்) இறுதியில் ஆரம்பிக்க இயக்குநர் ஹெச்.வினோத் ப்ளான் போட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையில் “நான் திரு.அஜித் குமார் அவர்களின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் திரு.அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும். சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலை படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்து உள்ளது.
இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் திரு.சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். மேலும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை திரு.சுரேஷ் சந்திரா அவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம், தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது
Legal Notice from the office of Mr #Ajithkumar pic.twitter.com/2fYxgTlpnc
— Suresh Chandra (@SureshChandraa) September 17, 2020