தமிழ் சினிமாவில் ஒரு சின்ன படம் எடுத்து ஹிட் கொடுத்து, அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து சாதித்து காட்டியவர்கள் ஏராளம். இந்த லிஸ்டில் இருக்கும் ஒரு சூப்பர் இயக்குநர் தான் ஹெச்.வினோத். முதல் படத்தை கச்சிதமாக கொடுத்து அசத்தினார். அது தான் ‘சதுரங்க வேட்டை’. இதில் ஒளிப்பதிவாளர் நட்டி தான் கதையின் நாயகனாக வலம் வந்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றி, அடுத்ததாக கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை ஹெச்.வினோத்திற்கு வழங்கியது. பரபர ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’-வும் சூப்பராக ஓடியது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சக்சஸால் ஹெச்.வினோத்தின் கேரியர் கிராஃப் இன்னும் ஒரு படி மேலே சென்றது. இந்த முறை டாப் ஸ்டார்களில் ஒருவரான ‘தல’ அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை இயக்கினார்.
இப்படம் வெற்றி அடைந்ததும், ஹெச்.வினோத்திற்கு அடித்தது இரண்டாவது ஜாக்பாட். அஜித்தை வைத்து இன்னொரு படம் இயக்கும் வாய்ப்பு தான் அது. அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இன்று (செப்டம்பர் 5-ஆம் தேதி) இயக்குநர் ஹெச்.வினோத்தின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.