தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தல அஜித் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்தப் படத்தில் அஜித் நடிக்கிறார் என்பதை தவிர வேறு எந்த தகவல்களும் அதிகாரபூர்வமாக வெளிவராத நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா இந்த படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரைஷி நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்டபார்வை” படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை குறித்து எந்த விதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த மே1ஆம் தேதி அஜித் பிறந்தநாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடலாம் என்று திரைப்படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட கூடாது என்று அஜித் கூறிவிட்டாராம்.
தற்போது சில தளர்வுகள் லாக்டவுனில் இருப்பதால், அஜித் இந்த படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிடுவதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம்.
அதனால் “வலிமை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற ஆயுத பூஜை அன்று வெளியிடலாம் என்று திரைப்பட குழு முடிவு செய்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் இதே ஆயுதபூஜை அன்று விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தின் டிரைலரை வெளியிட அந்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
ஆயுத பூஜையன்று தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது. அஜித் நடிப்பில் “வலிமை” திரைப்படம் 2021 தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று ஏற்கனவே திரைப்படக் குழு அறிவித்துள்ளது.