முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் துவங்கிய நேரத்தில், படம் இந்த ஆண்டு (2020) தீபாவளிக்கு வெளிவரும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது இருக்கும் சூழலில் அது சாத்தியமே இல்லை. தற்போது, ‘வலிமை’யை அடுத்த ஆண்டு (2021) தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று அஜித் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.