அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட நடிகர் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆர்.என்.ஆர்.மனோகர். இவர் தமிழில் ‘சலீம், நானும் ரௌடி தான், மிருதன், வீரம், வேதாளம், என்னை அறிந்தால், தீரன் அதிகாரம் ஒன்று, அயோக்யா, காப்பான், விஸ்வாசம், கைதி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆர்.என்.ஆர்.மனோகர் நடிகராக மட்டுமில்லாமல் ‘மாசிலாமணி, வேலூர் மாவட்டம்’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது, நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர்.மனோகருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.