முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள்.
3டி படமான இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் ராமர் மற்றும் அனுமனை அவமதிக்கும் வகையில் இருப்பதால், இப்படத்தை திரையரங்கில் திரையிடவும், OTT-யில் ரிலீஸ் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும், இதன் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ‘அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்’ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.