சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர். இவர் ‘மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதிபகவன்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் ‘யோகி, வடசென்னை, மாறன்’ போன்ற படங்களில் நடிக்கவும் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, இயக்குநரும், நடிகருமான அமீர் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வென்றது குறித்து பேசுகையில் “கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது, அதுவும் முதல் ஒரு இந்திய திரைப்படமாக கிடைத்ததில் பெருமை.
ஆனால், ஆஸ்கர் விருது ஒரு பெரிய விருதுன்னு நான் என்னைக்குமே நினைச்சது இல்லை. அது அந்த நாட்டின் தேசிய விருது, அவ்ளோதான். 30 வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் விருதுகளுக்கான மரியாதை, அங்கீகாரம் என்பது வேறு. இப்போ எல்லா விருதுகளிலும் அரசியல் இருக்கு.
ஆஸ்கர் மட்டும் அல்ல, தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், தனியார் நடத்தக்கூடிய விருதுகள்ன்னு எல்லா விருதுகளிலும் அரசியல் இருக்கு. எல்லாமே தெரிந்தவர்களுக்குன்னு ஒரு லாபில தான் நடக்குது. 2007-ல் ‘சிவாஜி’ படத்துக்காக சிறந்த நடிகர் ரஜினிகாந்துன்னு மாநில அரசு விருது கொடுக்கப்பட்டது.
மனசாட்சி தொட்டு சொல்லுவோம் நம்ம சிறந்த நடிகருன்னு ரஜினிகாந்த் அவர்களை சொல்ல முடியுமா? சிறந்த எண்டர்டெயினர் தான் ‘சூப்பர் ஸ்டார்’. அதுல மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால், அந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் சிறந்த நடிப்பு இருந்ததா? அதுனால என்னை பொருத்தவரைக்கும் விருதுகள் எல்லாமே ஒரு லாபி தான்” என்று கூறியுள்ளார்.