அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்கு கொரோனா உறுதி!

  • July 13, 2020 / 01:21 PM IST

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்களும் வீடுகளுக்குள்ளேயே பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறார்கள். குறிப்பாக சினிமா துறை முற்றிலுமாக முடங்கி இருப்பதால் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் குடும்பத்தினருடன் தங்களது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

அனைவரும் குவாரண்டைனில் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாஸிட்டிவ் வந்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இதைப்பற்றி அமிதாப்பச்சனே சமூக வலைத்தளங்களில் பின்பு பதிவிட்டு இதை உறுதி செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்போது அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் இவர்களது மகள் ஆராத்யா ஆகிய மூவருக்குமே கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தில் நால்வருக்கும் கொரோனா தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது முதல் பல சினிமா பிரபலங்களும் அவர்களது நண்பர்களும் மட்டுமின்றி சாதாரண மக்கள் கூட அவர்களுக்கு விரைவில் கொரோனா பாதிப்பு குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த கமெண்ட்டுகளை பார்த்த அமிதாப்பச்சன் மிகவும் நெகிழ்ச்சியடைந்து “உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனைக்கும் என்னால் தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை, இருப்பினும் உங்கள் அனைவரது வேண்டுதலுக்கும் எனது மிகப்பெரிய நன்றி. நான், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா ஆகிய நால்வரும் விரைவில் குணமடைய வேண்டும் என்ற உங்களின் இந்த அன்பான வேண்டுதலுக்கு கைகூப்பி நன்றி கூறுகிறேன்” என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது ரசிகர்கள் இவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து அதை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus