முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.
‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல், அருவா’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படம் என மூன்று படங்கள் லைன்-அப்பில் இருக்கிறது. தற்போது, சூர்யா ரசிகர்களுக்காக ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. 2014-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘அஞ்சான்’. சூர்யா ‘ராஜுபாய்’ என்ற ரோலில் வலம் வந்த இந்த படத்தை பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகியாக சமந்தா நடித்திருந்தார். இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் படம் படு தோல்வி அடைந்தது. சமீபத்தில், இந்த படம் ஹிந்தியில் ‘கதர்நாக் கில்லாடி 2’ என்ற பெயரில் டப் செய்து ‘கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ்’ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இப்போது யூடியூபில் இப்படத்தின் ஹிந்தி வெர்ஷன் 15 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை செய்திருக்கும் முதல் தமிழ் படம் ‘அஞ்சான்’ தானாம்.