இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகங்களை கொண்ட அனுராக் கஷ்யப், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக கால் பதித்தார்.
அதிகமாக பாலிவுட்டில் இருக்கும் அனுராக் காஷ்யப் தமிழ் படங்களின் மீது அதிக ஆர்வத்தையும் மரியாதையும் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
கடந்த வியாழனன்று அனுராக் காஷ்யப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய வீட்டு லைப்ரரியை சுத்தம் செய்யும்போது கிடைத்த பொக்கிஷங்களைப் பற்றி பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது, அவரது படங்களான நோ ஸ்மோக்கிங், பாம்பே வெல்வெட், பிளாக் பிரைடே மற்றும் பாஞ்ச் படங்களின் வெளிவராத பதிவுகளை கண்டெடுத்ததாக கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருந்த மற்றொரு ட்விட்டர் பதிவில், தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “வடசென்னை” படத்தின் ஃபஸ்ட் கட் வெர்ஷனை கண்டெடுத்ததாகவும் இதை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி “சுப்பிரமணியபுரம்” திரைப்படத்தின் சப்டைட்டில் வெர்ஷனையும், தியாகராஜா குமார் ராஜா இயக்கத்தில் வெளியான “ஆரண்யகாண்டம்” திரைப்படத்தின் அண் கட் வெர்ஷனையும் கண்டெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழ் சினிமாவின் மீது அனுராக் காஷ்யப் கொண்டுள்ள ஆர்வம் குறித்து நம்மால் அறிய முடிகிறது.