சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பமே மெகா ஹிட்டானது. அந்த படம் தான் ‘ரோஜா’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’, கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் என மூன்று தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் புனேவில் ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்று ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இரவு 10 மணிக்கு மேலும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கடைசி பாடலை பாடிக் கொண்டிருந்தபோது, மேடைக்கு ஏறிய போலீசார் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தியிருக்கிறார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.