டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், டான்’ மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘கல்யாண வயசு, காந்த கண்ணழகி, செல்லம்மா, சோ பேபி’ போன்ற சில பாடல்களை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். நேற்று மாலை வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலையும் சிவகார்த்திகேயன் தான் எழுதியுள்ளார்.
தற்போது, சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக பணியாற்றுவதற்கு வாங்கும் சம்பளத்தை மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் குடும்பத்துக்கு கொடுத்து உதவி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களுக்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.