இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ!
June 26, 2020 / 07:35 PM IST
|Follow Us
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னடக்கமான திறமையான இசையமைப்பாளர். தன் மாறுபட்ட இசையால் ஏராளமான விருதுகளையும் ரசிசிகர்களையும் பெற்ற இவர், விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
ஜூன் 26 -உலக போதை தடுப்பு நாளாக 1987 ஆம் வருடத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் இந்த வீடியோவில் “கொரோனாவால் உலகம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கொடிய இந்த கொரோனா வைரஸிலிருந்து கூட மீண்டு விடலாம், ஆனால் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். போதைக்கு அடிமையாகுபவர்களால்தான் எண்ணற்ற கொடும் குற்றங்கள் இந்த சமுதாயத்தில் நடக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் வெளிப்பாடாகும். அதனால் இன்று உறுதிமொழி எடுத்து, போதை பழக்கத்திலிருந்து அனைவரையும் மீட்போம். வளரும் இளைய தலைமுறைக்கு நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிக் கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
1992 ஆம் ஆண்டு வெளிவந்த “ரோஜா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அன்றிலிருந்து அவர் இசையமைப்பில் எந்த பாடல் வந்தாலும் அது வெற்றிப் பாடலாக அமைந்தது. தனக்கென தனி பாணியை இசையில் கொண்டுள்ள இவர் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்று தமிழரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்தவர் இவர். தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம், இந்தி என அனைத்து மொழிப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
தமிழில் கோப்ரா,அயலான், பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணா ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .இந்த திரைப்படங்களின் வேலைகள் லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் “லே மஸ்க்” எனும் ஆங்கில மொழியில் உருவாகும் திரைப்படத்தை இவர் தயாரித்து, இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.