தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் இசைக்கென்று எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் படமான “தில் பச்சாரா”வில் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ஹாட் ஸ்டார் எனும் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது.
மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்திர்க்கு கௌரவம் அளிக்கும் விதமாக இந்த படத்திற்கு இசையமைத்ததாக ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் அவரிடம் ஏன் பாலிவுட்டில் அதிக படங்கள் இசையமைப்பதில்லை என்று கேள்வி கேட்டதற்கு, தான் நல்ல படங்களின் வாய்ப்புகளை நிராகரிப்பதில்லை என்றும், ஏதோ ஒரு கும்பல் தன்னைப் பற்றி தவறான விஷயங்களை பரப்பி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் “தில் பச்சாரா” படத்தின் இயக்குனர் முகேஷ் சப்ரா தன்னிடம் இந்த படத்திற்காக அணுகி நான்கு பாடல்களை இரண்டே நாட்களில் முடித்துத் தருமாறு கேட்டிருக்கிறார் என்றும், அப்போது ரகுமானை பற்றி பலர் அவதூறான கருத்துக்களை கூறியதாக முகேஷ் குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு முகேஷ் கூறியதற்கு பின்தான் தனக்கு ஏன் பாலிவுட்டில் நல்ல படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்பு வருவதில்லை என்பது தனக்கு புரிந்ததாக கூறியிருக்கிறார் ரகுமான். மேலும் அவர்கள் செய்வது தீங்கு என்றே தெரியாமல் செய்து வருகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தன்னிடமிருந்து நல்ல படைப்புகளை எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள், இப்படி வீணான அவதூறுகளை பரப்புபவர்களும் இருக்கிறார்கள். நான் கடவுளையும் விதியையும் நம்புபவன், அதனால் நல்ல படைப்புகளை எதிர்பார்த்து என்னிடம் யார் வந்தாலும் நான் அவர்களுடன் பணிபுரிவேன் என்று பெருந்தன்மையாக கூறியிருக்கிறார் ரகுமான்.