சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 2001-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ தான் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான முதல் தெலுங்கு படம். இதில் ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரின் ‘சிம்ஹத்ரி, யமதொங்கா’, நிதினின் ‘ஷை’, பிரபாஸின் ‘சத்ரபதி, பாகுபலி 1&2’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’, ராம் சரணின் ‘மகதீரா’, சுனிலின் ‘மர்யாத ராமண்ணா’, நானி – சுதீப்பின் ‘நான் ஈ’ ஆகிய படங்களை இயக்கினார்.
‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படம் கடந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானதுடன், வசூலிலும் மிகப் பெரிய சாதனை படைத்தது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கப்போகும் புதிய தெலுங்கு படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு ரூ.158 கோடி என தகவல் கிடைத்துள்ளது.